ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன்
(யோண் விலையுயர்ந்த உடை அணிந்து வெளியில் வருகின்றான். அவனை எதிர்பார்த்து டேவிற், கரன், கண்ணன், ......ஆகியோர் வெளியில் நின்றனர். )
டேவிற் ... என்னடா இவ்வளவு நேரம் செல்லுது நீ வர.
(விலையுயர்ந்த ஜக்கற் சப்பாத்து , இவைகளைக்கண்டதும் மனதுக்குள் எழுந்த ஒரு வித பொறாமை குணத்தை மனதுக்குள் அடக்கியவாறே )
கண்ணன்.. என்ன யோண் கிறிஸ்மஸ் என்றால் புது உடுப்பு கட்டாயம் போட வேண்டுமா?
யோண் ...கொண்டாட்டங்களுக்கு புது உடுப்பு போடுவது சிறந்த நாகரீகம் போட மக்கு ! இதெல்லாம் உனக்கெங்கே விளங்கப்போகுது?
கரன்...... சரியடா நீ எங்கட தமிழ் வகுப்பில் உள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் கிறிஸ்மஸ் விழாவு
க்கு மக்டோனாஸ்சுக்கு மதியஉணவு உண்பதற்காக வந்து நிற்கும்படி சொல்லிவிட்டு இங்க கதைத்து கொண்டு நின்றால் என்ன மாதிரி
யோண்....சரி சரி வாங்க போகலாம்.
டேவிற் .... என்னடா எவ்வளவு காசு கொண்டு வருகிறாய்?
கண்ணன் ..... ஐஸ்கீரீமும் வாங்கித்தராவிடில் உன்னை விடமாட்டோம்.
எல்லோரும் கத்துதல்.
கண்ணன்.... இன்றைக்கு வகையாய் மாட்டிக் கொண்டாய்.
யோண்... பறக்காதீங்கடா நிச்சயமாய் வாங்கித்தருகின்றேன்.
மக்டோனாஸ் கடைமுன் பள்ளிநண்பர்கள் ஒன்று சேர்தல் அங்கு தற்போதுதான் இலங்கையில்இருந்து வந்த பாபுவும் அங்கே நிற்கிறான். நாகரீகம் இல்லாத உடை அணிந்து ஏழ்மையாக நிற்றல்.
யோண் .... உவனுக்கு யார் அழைப்பு கொடுத்தது?
கரன்....... ஏன் நீதானே எமது வகுப்பு மாணவர்களுக்கு எல்லாம் கொடுக்க சொன்னாய்
யோண்.... இல்லையாடா நாகரீகம் இல்லாதவன் இப்பதான் இலங்கையிலிருந்து வந்துள்ளான்.
கண்ணன். ... என்னடா சொல்லுகிறாய்.
டேவிற்... அவனுக்கு இங்கிலீஸ்சும் தெரியாது உடுப்பும் வடிவில்லை.என்றுதானே யோசிக்கிறாய்
யோண்.... எப்படியாவது என்னவாவது சொல்லி அவனை கடத்து.
கரன்.... என்னடா பிரச்சனை காசு போதாதா?
டேவிற்..... இல்லை வந்து யோண் ............(சொல்லத்தயங்குதல்)
கரன்.........(ஆத்திரத்துடன்) ஏனடா யோண் நாகரீகம் நாகரீகம் என்று வாய் கிழியாமல் பேசவாய்.
நாகரீகம் என்பது உடையில் சாப்பாட்டில் இல்லை எது நாகரீகம் என்று உனக்கு தெரியவில்லையே
டேவிற்....... அதுவும் அந்நியநாட்டில் எமது இனத்தவன் . உன் வகுப்பு மாணவன் . ஏழ்மையைக்கண்டு நீவெறுப்பதா ? புதிய உடைகளை அணிவதும் ஐஸ்கீரிம் சாப்பிடுவதும் மட்டுமே நாகரீகம் அல்ல. மற்றவர்களின் மனம் புண்படாமல் பேசுவதே உயர்ந்த நாகரீகம்.
கரன்... ஏழ்மையை தாழ்மையை உலகுக்கு உணர்த்தவே இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அதற்காகவே மாட்டுத்தொழுவத்தையே தன் பிறப்பிடமாகத் தெரிந்து கொண்டார்.
அவர் நினைத்திருந்தால் மன்னன் மகனாக பிறந்திருக்கலாம். கைவிடப்பட்ட அல்லுற்ற ஏழைகளின் நண்பனாகவே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். அவரின் திருநாளைக் கொண்டாடும் நீ எப்படி இப்படி நடந்து கொள்ளலாம். வெட்கமாக இல்லை. ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொருமனிதனும் என் சகோதரன் என்ற உணர்வு வேண்டும்.
கண்ணன் .......வாங்கடா இவனிடம் வாங்கிச் சாப்பிடுவதே எமக்கு நாகரீகம் இல்லை.
எல்லோரும் கடையைவிட்டு வெளியேறுதல்.
யோண்.... (பாபுவின் கையைப்பிடித்து ) என்னை மன்னித்து விடு தன்னைச்சிலுவையில் அறைந்தவர்களையே மன்னித்து ஏற்றுக்கொண்ட அந்த உத்தமர் யேசுபிரானின் கொள்கையை ஏற்றுக்கொண்ட நான் இப்படி நடந்தது தவறு . எல்லோரும் என்னை மன்னித்து சாப்பிட வாருங்கடா .
எல்லோரும் மகிழ்ச்சியாக சாப்பிட செல்லல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக