புதன், 17 நவம்பர், 2010

கிறிஸ்மஸ் பேச்சு 2

கிறிஸ்து பிறப்பும்     மனித விடுதலையும் 

இறைமகன்  இயேசு  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப் பூவுலகில் மனிதனாகப் பிறந்த நிகழ்வே கிறிஸ்மஸ் ஆகும் .அவர் இவ்வுலகில் பிறக்கும் போது எளிமை சமாதானம் பிறர் அன்பு விடுதலை என்ற கனிகளைக்  கொண்டு வந்தார் . இவற்றை எம் வாழ்வில் கடைப்பிடிப்பதிலேயே கிறிஸ்மஸ் விழாவின் அர்த்தம் நிறைந்து கிடக்கின்றது. விழா என்றாலே எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விழாவை விரும்புகின்றர். விழா கொண்டாடுவதால் மனதிற்கு மகிழச்சியும் உற்சாகமும் கிடைக்கின்றது. கவலைகள் மறக்கப்படுகின்றன. அன்பு  ஆட்சி செய்யப்படுகின்றது  ஆனால் இந்த விழாவை க் கொண்டாடும் பொழுது கனிகளை விட்டு காய்களைத் தேடுகின்றோம். 
                                                                                                                      மேற்குலகின் விஞ்ஞான வளர்ச்சியும் மனித தேவைப்பெருக்கமும்வாழ்க்கைச் சூழ்நிலையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகின்றது. நாம் அடைக்கலம் புகுந்துள்ள மேலை நாடெங்கும் ஐப்பசி மாதத் தொடக்கத்திலேயே கிறிஸ்மஸ் பொருட்கள் கடைகளை நிரப்பி விடும். ஐந்து வயதுச்சிறுவன் கடைப்பொருட்களை கவனித்து விட்டு தாயிடம்  அம்மா கிறிஸ்மஸ் வந்து விட்டது வாருங்கள் கிறிஸ்மஸ் குடில் வைக்கலாம்   என அடம்பிடிக்கின்றான்.
                                                                                                                                 காலத்தோடு ஒத்து போகின்ற இந்த வளர்ச்சி தேவைதான் இத்தகைய தேவைகளோடு வாழவேண்டிய ஒரு சூழ்நிலைக்கு மனிதன் ஆளாவதும் உண்மைதான் ஆனால் இத் தேவைகள் அவனுடைய உள்ளத்தை ஆக்கிரமித்து விடக்கூடாது . அதிலும் புலம் பெயர்ந்து வாழும் நாம் இதற்கு அடிமைப்பட்டால் கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தையே இழந்து நிற்போம். 
                                                                                                 கிறிஸ்து பிறப்பு என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது அவர் பிறந்த எளிமைக்கோலம்தான். மாட மாளிகை எல்லாம் அவர் வரவுக்காக காத்திருக்க அவரோ எளி குடிலில் பிறந்தார். 
                             எந்த எளியனும் என்னைச் சந்திக்க 
                             நான் குழந்தையாய் பிறந்தேன் 
                             நீ குழந்தைபோல் உள்ளம் கொண்டிருக்க 
                             நான் மீட்பராக வந்தேன் .நீ மீட்பு பெற
                                                                                                              எங்கோ கேட்ட பாடல் வரிகள் . அர்த்தம் நிறைந்த வரிகள்.
                                      மேலைநாட்டவர்கள் எல்லாம் கிறிஸ்மஸ் என்றவுடன் அன்பளிப்பு பண்டங்கள் என அவற்றிலேயே காலத்தை கரைத்து விடுவார்கள் .பெற்ற தாய் தந்தையரை வருடம் முழுவதும் சென்று பார்க்காதவர்கள் . கிறிஸ்மஸ் காலத்தில் ஒரு பூங்கொத்துடனும் ஒரு பொட்டல இனிப்புடனும் சென்று பாசத்தை பகிர்ந்து திரும்புவார்கள். இது அவர்களின் நிலை . இன்று நாமும் அவர்களின் சூழலில் வாழ்வதாலோ என்னவோ  என்ன பரிசு வாங்குவது என்ன சமைப்பது யாரை அழைப்பது என்ற சில்லறை விடயங்களிலேயே மூழ்கிப்போகின்றோம். 
மற்ற மனிதனின் அடிப்படைத்தேவையை விட என்னுடைய ஆடம்பரத்தேவை உயர்ந்தது. என்றே வாழ்கின்றோம். நமது நாட்டை பார்த்தே  புரிந்து கொள்ளலாம்.  யுத்தத்தின்கோரப்பிடியில் அகப்பட்ட மக்கள் மரங்களின்  கீழும் தெருவோரங்களிலும்  வாழ்வதுடன்  ஆடை இன்றி  சத்தான உணவு இன்றி  துன்பத்தில் துடிக்கின்றார்கள். ஆனால் நாமோ அவர்களின் நிலையை எண்ணாது களியாட்டங்களில் நேரத்தையும் பணத்தையும் கரியாக்குகின்றோம்.  பொன் பொருள் புகழ் தேடும் உலகில் மனிதனைத்தேடியவர் யேசு எனவே ஒவ்வொரு மனிதனும் மனிதப் பண்புகளுக்கு மதிப்புக் கொடுத்து வாழ்வதிலேயே கிறிஸ்மஸ் விழாவின் அர்த்தம் அடங்கியுள்ளது.

 


 

                                                  
 

                                                                                                                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக